மூதூர், பாட்டாளிபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி அன்பளிப்பு

அண்மையில்  எனது இலங்கை பயணத்துக்கு முன்,  04/06/17  அன்று யேர்மனி கேவலார் என்ற இடத்தில் திருமதி கலைவாணி எகானந்தராஜா அவர்களுடைய ஒலி/ஒளி இறுவெட்டு வெளியீட்டிற்காக அழைக்கப்பட்டிருந்தோம். திருமதி கலைவாணி அவர்களினால் உருவாக்கப்பட்ட ஜெர்மனி/நையினை நாகபூசணி பாமாலை பாடல் இறுவெட்டினை வெளியீடு செய்து அவரை கௌரவப்படுத்தும் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டோம். பாடல்கள் அனைத்தும், தென் இந்திய கலைஞர்களுக்கு ஈடாக பாடப்பட்டிருந்தமையை அவதானித்தோம். ஈழத்து இசைத்துறைக்கு திருமதி கலைவாணியின்  சேவை நீண்டகாலம் தொடரவேண்டும் என வாழ்த்துகிறோம். அத்துடன் அவ்விடத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான புனர்வாழ்வும் புதுவாழ்வும் (Assist RR) நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை பரப்புவதற்கான ஒரு சந்தர்பமாகவும் எடுத்துக்கொண்டேன். புனர்வாழ்வும் புதுவாழ்வும் (Assist RR)  நிறுவனத்தின் வேலைத்திட்டங்களையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுடைய  தேவைகள் பற்றியும் ஒரு ஆவண விளக்க உரையை நான் செய்திருந்தேன். அந்த விளக்கவுரை பார்வையாளரிடையே நன்றாக உள்வாங்கப்பட்டதுடன், தொடர்ந்தும் ஜேர்மனியில் இதுபோன்ற ஆவண விளக்க உரைகளை நடாத்தவேண்டும் என்று கேட்டிருந்தனர். பார்வையாளர்களில் ஒருவர், இந்த தேவைகளுக்காக நாமும் ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும் என கூறி ,பார்வையாளர்களிடம் பணம் சேகரிக்க தொடங்கினார். அங்கு திரட்டப்பட்ட உதவிப்பணம் 385 யூரோவாக உயர்ந்து எம்மிடம் கையளிக்கப்பட்டது. கேவலர், யேர்மனி இடம்பெயர் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுடைய ஏதாவது தேவையை நிறைவேற்றுமாறு எங்களிடம் கேட்டிருந்தனர். நான் யூன் 6 முதல் யூன் 15 வரை இலங்கையில் நின்ற போது, பாட்டாளிபுரம், மூதூரில் உள்ள பின் தங்கிய கிராமத்துக்கு சென்றிருந்தேன். மூதூரில் ஏழு கிராமங்களில் தமிழ் ஆதிவாசிகள் (வேடுவர்கள்) வசிக்கிறார்கள். அங்கு உள்ள ஆதிவாசிகள், தேன் எடுப்பதுவும், விறகு வெட்டுவதும், வேட்டையாடுவதும் தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பலவகைகளிலும் அவர்கள் தமது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு உதவி தேவைப்பட்டவர்களாகவும், தனிமை படுத்தப்பட்டவர்களாகவும் உள்ளனர். புனர்வாழ்வும் புதுவாழ்வும் நிறுவனத்தின் மூலம் பாட்டாளிபுரம் பாடசாலை பிள்ளைகளுக்கு மிதிவண்டியும், பாடசாலை முடிந்தபின் மேலதிக கல்வி உதவியும் செய்ய முன்வந்தோம். எங்களுடைய வாக்குறுதியில் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக காணப்பட்டனர். காரணம் அவர்கள் கூறினார்கள் “எத்தனையோ பேர் வந்தார்கள், போனார்கள் அவர்களிடமிருந்து எந்த உதவிகளோ, ஆதரவோ கிடைத்ததில்லை” என வருத்தம் தெரிவித்தனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை (25/06/17) இலங்கைக்கான எமது நிறுவனத்தின் தலைவர் திரு. கென்றி அமல்ராஜ் மீண்டும் பாடாளிபுரம் சென்று, 04/06/17 இல் கேவலர், யேர்மனி இடம்பெயர் தமிழர்களால் திரட்டப்பட்ட உதவிப்பணத்தில், ஆறு மிதிவண்டிகளை கொள்வனவு செய்து அந்த பகுதி  மாணவர்களுக்கு கையளித்தார். திருமதி கலைவாணி அவர்களின் இறுவெட்டு வெளியீட்டுவிழாவில் இந்த பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

நன்றி /வணக்கம் .  Dr.வேலாயுதம் .சர்வேஸ்வரன்

IMG_0946  IMG_0990IMGP1820 copy  IMGP1826 copy

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.